கோம்பையில், தூய்மை பணியாளர்கள் தர்ணா
உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 15-வது வார்டு பகுதியில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை தொடங்கினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசினார். இதில் மனமுடைந்த தூய்மை பணியாளர்கள் அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பணிகளை புறக்கணித்துவிட்டு அங்குள்ள கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.