காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி உடலில் பெட்ரோல் ஊற்றி என்ஜினீயர் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி என்ஜினீயர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
பெரம்பலூர்,
காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி என்ஜினீயர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று ஓடிவந்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று, அவரிடம் இருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை கைப்பற்றினர். மேலும் அவர் மீது, தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் மேற்கு தெருவை சேர்ந்த அய்யாகண்ணுவின் மகன் மணிகண்டன் (வயது 24) என்பது தெரியவந்தது. விசாரணையில் மணிகண்டன் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:-
என்ஜினீயரான மணிகண்டன், சென்னையில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர், சிறுகன்பூர் அருகே உள்ள சாத்தனூர் நடுத்தெருவை சேர்ந்த சோமுவின் மகள் பிரசன்னாவை (21) பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார். பின்னர் பிரசன்னா பி.எஸ்.சி. படித்துவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
காதல் திருமணம்
அப்போது மணிகண்டனும், பிரசன்னாவும் தனிமையில் அடிக்கடி சந்தித்துள்ளனர். இதில் பிரசன்னா கர்ப்பமானார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு பிரசன்னாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை மீறி மணிகண்டன் சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைத்து கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியன்று பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு, சென்னையிலேயே குடும்பம் நடத்தி வந்தார். தற்போது பிரசன்னா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் பிரசன்னாவிற்கு, அவரது தந்தை போன் செய்து, அவருடைய தாய் கலையரசிக்கு உடல்நலம் சரியில்லாததால் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மணிகண்டன், தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டிற்கு வந்த போது, அங்கு காரில் வந்த பிரசன்னாவின் தந்தை, அவரை காரில் அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு சென்றார். இதனால் மணிகண்டன் தனியாக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து அவர் வந்ததால், சுகாதாரத்துறையினர் மணிகண்டனை வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். அப்போது அவர் தனது மனைவி, அவருடைய பெற்றோர் வீட்டில் இருப்பதாக சுகாதாரத்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
மிரட்டல்
பிரசன்னாவை தனிமைப்படுத்த, அவரது வீட்டிற்கு சுகாதாரத்துறையினர் சென்றபோது, அவரது வீடு பூட்டியிருந்ததாக தெரிகிறது. பிரசன்னாவை, மணிகண்டன் செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் பிரசன்னாவையும், அவரது வயிற்றில் வளரும் குழந்தையையும் கொலை செய்து விடுவதாக, அவரது பெற்றோர் தன்னை மிரட்டியதாக மணிகண்டன் போலீசாரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்தே அவர், காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிகண்டனுக்கு சிகிச்சை அளித்து, அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி என்ஜினீயர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.