சேலம் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு.

Update: 2020-05-10 04:33 GMT
சங்ககிரி,

சங்ககிரி குப்பனூரில் புறவழிச்சாலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று கலெக்டர் ராமன் ஆய்வு நடத்தினார். அப்போது வருவாய் அதிகாரி திவாகர், உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், தாசில்தார் பாலாஜி, வடுகப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி ரமேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் அங்கு பணியில் இருந்தவர்களிடம் கலெக்டர் ராமன் கூறும் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்தால் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும், வெளிமாவட்ட, மாநிலங்களில் வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதே போல தலைவாசலை அடுத்த நத்தக்கரை சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியிலும் கலெக்டர் ராமன் ஆய்வு நடத்தினார். அப்போது அவரிடம், செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான மருத்துவ குழுவினர் விளக்கம் அளித்தனர். மேலும் வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக அங்கு ஒரு தனியார் பள்ளி, 2 தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து, அவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, உதவி கலெக்டர் துரை, ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியிலும் கலெக்டர் ராமன் ஆய்வு நடத்தினார்.

மேலும் செய்திகள்