நாமக்கல் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’

நாமக்கல் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2020-05-10 04:15 GMT
நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழக அரசின் உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள 188 டாஸ்மாக் கடைகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள 20 கடைகள் தவிர அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

இதையடுத்து மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி மட்டும் சுமார் ரூ.8 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இதேபோல் 8-ந் தேதியும் ரூ.8 கோடிக்கு மேல் மதுபானம் விற்பனையானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் நிபந்தனைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என கூறி கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

‘சீல்’ வைக்கப்பட்டது

இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 168 டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி இரும்பு கதவுகளிலும் ‘வெல்டிங்’ வைக்கப்பட்டது. இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சில டாஸ்மாக் கடைகளில் ஐகோர்ட்டு மூட உத்தரவு பிறப்பித்ததும், கூடுதலாக மது விற்பனையானதாக கணக்கு எழுதி கடை ஊழியர்களே மதுபாட்டில்களை எடுத்து வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து விட்டதாக புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்