கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த 14 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம்,
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கோயம்பேடு பகுதியில் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வந்துள்ளதாக 14 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் இவர்கள் யாருக்கும் நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் வசித்து வரும் பகுதியில் உள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் ராமநாதபுரம் சுகாதார வட்டத்தில் 73 பேருக்கும், பரமக்குடி சுகாதார வட்டத்தில் 54 பேருக்கும் என 127 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்முடிவுகள் வர வேண்டி உள்ளது.
தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிவகங்கை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பெண்கள் உள்பட 24 பேரில் 4 பெண்கள் உள்பட 15 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மீதம் உள்ள 8 பேர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.