கீழக்கரையில், பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதித்தோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் இதுவரை 15 பேர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையின் பயனாக குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்துவிட்ட நிலையில் மீதம் உள்ளவர்கள் தொடர் சிகிச்சையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுகிழக்குத்தெரு பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணிற்கும், அதேபகுதியை சேர்ந்த 82 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 50 வயது பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பலியான 70 வயது மூதாட்டியின் மருமகள்ஆவார். நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தும் சீல்வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளே யாரும் சென்றுவர அனுமதி மறுக்கப்பட்டு அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25- ஆக உயர்ந்துள்ளது.