பஸ் போக்குவரத்து இல்லாததால் கொல்லுப் பட்டறைகளில் விவசாய உபகரணங்கள் விற்பனை குறைவு
கொல்லுபட்டறைகளில் விவசாய பணிக்கான உபகரணங்கள் தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. பஸ் போக்குவரத்து தொடங்காததால் அங்கு விற்பனை குறைந்துள்ளது.
புதுக்கோட்டை,
கொல்லுபட்டறைகளில் விவசாய பணிக்கான உபகரணங்கள் தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. பஸ் போக்குவரத்து தொடங்காததால் அங்கு விற்பனை குறைந்துள்ளது.
கொல்லுப்பட்டறைகள்
கொரோனா வைரஸ் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது. கொரோனாவின் தாக்கத்தால் அமலில் உள்ள ஊரடங்கில் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் கடைகள், தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வின் காரணமாக விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
இதற்கிடையில் விவசாய பணிக்கு தேவையான மண்வெட்டி, கோடாரி உள்ளிட்ட உபகரணங்கள் தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை பகுதியில் கொல்லுப் பட்டறைகளில் இந்த உபகரணங்கள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விற்பனை குறைவு
மண்வெட்டி பெரிய அளவு மற்றும் சிறிய அளவுகளிலும், கதிர் அறுக்கும் அரிவாள்கள், மரங்களை வெட்டக்கூடிய கோடாரிகள், அரிவாள்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொல்லுப்பட்டறையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் அவை விற்பனைக்காக கடை முன்பு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் வந்து இந்த உபகரணங்களை வாங்கி செல்கின்றனர்.
அதேநேரத்தில் கிராமப் புறங்களில் இருந்து அதிக அளவிலான மக்கள் யாரும் வந்து இதனை வாங்கவில்லை. ஏனெனில் பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் வர முடியாத நிலையில் உள்ளனர். இது தொடர்பாக கொல்லுப்பட்டறையின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “ஊரடங்கு தளர்வுக்கு பின்பு, தற்போது, பட்டறை திறக்கப்பட்டதால் உபகரணங்கள் தயாரிப்பில் அதிகம் ஈடுபட்டுள்ளோம். ஏற்கனவே தயாரித்த மண்வெட்டிகள், அரிவாள்கள் உள்ளிட்டவை குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. விற்பனை தற்போது அதிகம் நடைபெறவில்லை. கிராமப்புறத்தில் தான் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. அவர்கள் முன்பு அதிக அளவில் வந்து உபகரணங்களை வாங்கி செல்வது வழக்கம். தற்போது பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் நகரப்பகுதிக்கு வர முடியவில்லை. இதனால் விற்பனை குறைவாக தான் உள்ளது” என்றார்.