கோவையில் இருந்து பீகார், உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் - 2,280 பேர் புறப்பட்டு சென்றனர்
கோவையில் இருந்து பீகார், உத்தரபிரதேசத்திற்கு தலா ஒரு ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதில் 2,280 பேர் புறப்பட்டு சென்றனர்.
கோவை,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்தஊர்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி நேற்று முன்தினம் இரவு கோவையில்இருந்து பீகார் மாநிலத்திற்கு முதல் ரெயில் இயக்கப்பட்டது. இதில் 1,140 பேர் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று காலை 8 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் தான்பூர் பகுதிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக பயணசீட்டு பெற்றிருந்த வட மாநில தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் கோவை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ஒருசில தொழிலாளர்கள் காரமடை, சாய்பாபாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நடந்தே ரெயில் நிலையம் வந்தனர். சிலர் ஆபத்தான முறையில் தண்டவாளம் வழியாக நடந்து வந்தனர்.
சிறப்பு ரெயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து கோவை ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் பயணசீட்டு விவரங்களை சரி பார்த்தனர். பின்னர் அவர்களை ரெயில்நிலையம் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
ரெயிலில் பயணம் செய்த தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவை வழங்கப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள் ரெயில் பெட்டிகளில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த ரெயில் நாளை (திங்கட்கிழமை) பீகாரை சென்றடைகிறது.
இதையடுத்து நேற்று மாலை கோவையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பயணம் செய்ய விண்ணப்பித்த வடமாநில தொழிலாளர்களுக்கு கோவை வேலாண்டி பாளையத்தில் வைத்து நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் போலீஸ் வாகனங்களில் ரெயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு உத்தரபிரதேசத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தகவல் பரவியதும் நேற்று ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் கோவை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் பயணசீட்டு வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சொந்த ஊருக்கு செல்ல முடியாத விரக்தியில் சிலர் ரெயில் நிலையம் முன் ஏமாற்றத்துடன் அமர்ந்து இருந்தனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் தாங்கள் பணிபுரிந்த பகுதிகளுக்கு திரும்பி சென்றனர். சில நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை வாகனங்களில் அழைத்து சென்றனர். அப்போது சில வடமாநில தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் சமூக இடைவெளி இன்றி பயணம் செய்தனர்.
கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு வருகிற 18-ந் தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் 1 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். ஒரு சிறப்பு ரெயிலில் 1,140 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். எனவே வருகிற 18-ந் தேதி வரை உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு நாள்தோறும் ஒன்று அல்லது 2 ரெயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயிலுக்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.