கள்ளிக்குடி ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் 207 கடைகளில் காய்கறி வியாபாரம் செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கள்ளிக்குடி ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் விவசாயிகள் காய்கறி வியாபாரம் செய்திட 207 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு முறையாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-10 02:34 GMT
திருச்சி, 

கள்ளிக்குடி ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் விவசாயிகள் காய்கறி வியாபாரம் செய்திட 207 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு முறையாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் செல்ல தயக்கம்

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் காந்திமார்க்கெட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அதை தவிர்க்கும் வகையில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடி செலவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்ட 2014-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

பணிகள் முடிந்து 2017-ம் ஆண்டு திறப்பு விழா கண்டது. ஆனால், போதிய இடவசதி இல்லை என்றும், மாநகரில் இருந்து அதிக தூரத்தில் அமைந்துள்ளது என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி காந்திமார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல தயங்கினர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளிக்குடி மார்க்கெட்டில் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டன. பின்னர், வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் முதல் கட்டமாக 300 பேருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.

கொரோனா சிறப்பு வார்டு

அதைத்தொடர்ந்து கடந்த 30.6.2018 அன்று அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். ஆனால், 5 வியாபாரிகள் மட்டுமே அங்கு கடை திறந்தனர். அவர்களும் வியாபாரமின்றி, கடையை மூடிவிட்டு, மீண்டும் காந்தி மார்க்கெட்டுக்கே வந்துவிட்டனர். இதனால் கள்ளிக்குடி வணிக வளாகம் மூடு விழா கண்டது.

தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிறப்பு கண்காணிப்பு வார்டாக சில நாட்கள் செயல்பட்டது. இதற்கிடையே, மூடிக் கிடக்கும் கள்ளிக்குடி வணிக வளாகத்துக்கு அருகிலேயே திருச்சி மாவட்ட மனித வளர் சங்கத்தின் சார்பில் ‘கள்ளிக்குடி உழவர் அங்காடி’ விவசாயிகளை கொண்டு தொடங்கப்பட்டது. முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தான் அதற்கு தலைவர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் இருப்பதால், இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. எனவே, கள்ளிக்குடி வணிக வளாகத்தின் உள் பகுதியில் விவசாயிகளுக்குக் கடைகளை ஒதுக்கித் தரும்படி கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

207 கடைகள் ஒதுக்கீடு

இந்நிலையில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண்மைத் துறையின் கூட்டுப்பண்ணைய திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் கடைசியாக உள்ள 4 பிளாக்குகளில் உள்ள 207 கடைகளை ஒதுக்கீடு செய்ய திருச்சி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு முடிவு செய்துள்ளது.

மாத வாடகை அடிப்படையில் இக்கடைகளைப் பெறுவோர் காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்