அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள்-செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
பாபநாசம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள்-செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
கபிஸ்தலம்,
பாபநாசம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள்-செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
பாபநாசம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாபநாசம், கபிஸ்தலம், ஆதனூர், வீரமாங்குடி, பண்டாரவாடை, அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை, பூண்டி, சக்கராப்பள்ளி, பட்டீஸ்வரம், சாலியமங்கலம், சுவாமிமலை, சுந்தரபெருமாள்கோவில் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண்மைத்துறை அமைச்சருமான துரைக்கண்ணு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர்கள், செவிலியர்களுக்கு தேவையான உடைகள், முக கவசம், கையுறைகள், சோப்பு போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். கபிஸ்தலத்திலும், பாபநாசத்திலும் நடந்த இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார், பாபநாசம் அரசு டாக்டர் குமரவேல், ஆகியோரிடம் அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோபிநாதன், பாபநாசம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கண்ணன், ஜெகநாதன், சதீஷ், ஊராட்சி தலைவர் சுமதி குணசேகரன், துணைத்தலைவர் மகாலட்சுமி பாலசுப்ரமணியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சின்னையன், நடராஜன், கிரிராஜன், குமார், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு தேவையான உரங்கள்
பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் நோயில் இருந்து அனைவரும் அவரவர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், தனித்து இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதனை பெற்று பயனடைந்து வருகின்றனர். கோடை சாகுபடி நல்ல முறையில் செய்து வருகிறார்கள். விரைவில் முதல்-அமைச்சர் அறிவித்தவுடன் தூர்வாரும் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.