புதுச்சேரியில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறப்பு இல்லை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பது இல்லை என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2020-05-09 23:03 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மதுக்கடைகள் திறப்பு

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கடந்த வியாழக் கிழமை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது.

சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால், மதுக் கடைகளின் முன்பு கூட்டம் அலைமோதியது. மது பிரியர் கள் நீண்ட தூரம் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

இதே போல் புதுச்சேரியிலும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், மதுப்பிரியர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.இதை தொடர்ந்து மதுக் கடைகளை திறப்பது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

நீதிபதிகள் உத்தரவு

இந்தநிலையில், தமிழகத்தில் நிபந்தனைகள் எதையும் பின்பற்றவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

நிபந்தனைகளை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. மதுபாட்டில்களை வாங்க மதுபிரியர்கள் முண்டியடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் உடனடியாக இழுத்து மூடவேண்டும். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதுவை அமைச்சரவை கூட்டம்

இந்த நிலையில் நேற்று மாலை புதுவை அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் கேபினட் அறையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்து அங்கு மதுபிரியர்கள் அலை மோதியதால், ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடைகளில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பதற்கு அனுமதி அளித்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவு தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. ஆன்லைன் மதுபான விற்பனையின் சாதக பாதகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மதுக்கடை திறப்பு இல்லை

தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் மதுபான விற்பனை என்பது சாத்தியமாகாது என்பதால் மதுக்கடைகளை தற்போது திறப்பதில்லை என்றும், ஊரடங்கு உத்தரவு முடியும்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பது என்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சுமார் 30 நிமிடம் மட்டுமே இந்த கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்