தஞ்சையில், ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது பழிக்குப்பழியாக கொன்றதாக வாக்குமூலம்

தஞ்சையில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2020-05-09 22:54 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 37). ரவுடியான இவர், நேற்று முன்தினம் காலை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தஞ்சை நகர கிழக்குப்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை தொடர்பாக தஞ்சை கீழவாசல் டபீர் குளம் சாலையை சேர்ந்த செந்தூர்வேலன்(25), பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த பூச்சாண்டி என்ற கஜேந்திரன்(23), ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த துரை(23), தெற்கு அலங்கத்தை சேர்ந்த சாந்தகுமார்(23), கீழவாசலை சேர்ந்த கதிர்வேல்(19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பழிக்குப்பழி

அருண்குமார் வீட்டில் சம்பவத்தன்று நள்ளிரவு அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பூச்சாண்டியின் சகோதரர் கபாலி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

அவரை அருண்குமார் தான் கொலை செய்ததாக தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட தகராறில் பழிக்குப்பழியாக அருண்குமார் அரிவாளால் வெட்டி கொலை செய்யப் பட்டது கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்