சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு பள்ளிக்கூடங்களில் துவரம் பருப்பு வினியோகம் அமைச்சர் தொடங்கிவைத்தார்

சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ துவரம் பருப்பு வழங்கும் பணியை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-05-09 22:51 GMT
பாகூர்,

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஏற்கனவே சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. பின்னர் துவரம் பருப்பு வழங்க 510 டன் புதுச்சேரிக்கு வந்தது. அதற்கான பேக்கிங் செய்யும் பணி நடந்து முடிந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு வினியோகிக்க அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக அனைத்து தொகுதியிலும் தலா 5 பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வைத்து பருப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பேக்கிங் செய்த துவரம் பருப்பை அந்தந்த பள்ளிகளுக்கு குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சர் கந்தசாமி

இந்த நிலையில் பருப்பு வினியோகம் தொடக்க நிகழ்ச்சி ஏம்பலம் தொகுதி அரங்கனூர் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேலியமேடு, கிருமாம்பாக்கம் அரசு பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பருப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பல்நோக்கு ஊழியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்யும் வகையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரச்சனா சிங், ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்தனர். பருப்பு வினியோகத்தை 3 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதுவை புஸ்சி வீதியில் உள்ள சுப்பிரமணிய பாரதியார் அரசு பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்பு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்