ஊரடங்கு உத்தரவு: விலைவீழ்ச்சியால் விழி பிதுங்கும் விவசாயிகள்
ஊரடங்கு காரணமாக வெள்ளரிபழங்கள் விலைவீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள், விழி பிதுங்கி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
ஊரடங்கு காரணமாக வெள்ளரிபழங்கள் விலைவீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள், விழி பிதுங்கி வருகிறார்கள்.
விவசாயிகள் பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவினால் பெரிதும் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான். ஆரம்பத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கூட கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வாகன அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டதோடு, காய்கறிகளை விற்பனை செய்வதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
விழிபிதுங்கி வருகிறார்கள்
இருப்பினும் விவசாயிகள் இன்னும் அதில் இருந்து மீள முடியாமல் விழி பிதுங்கி வருகிறார்கள். இந்த ஊரடங்கு தொடங்கிய காலகட்டத்தில் வெள்ளரிக்காய் சீசன் தொடங்கியது. அப்போது அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த வெள்ளரிப்பிஞ்சுகளை, ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யவில்லை. அறுவடை செய்தாலும் அதை எடுத்துச்சென்று விற்பதற்கும் வழி இல்லாத நிலை ஏற்பட்டது.
மக்கள் நடமாட்டம் இருந்தால் தான் வெள்ளரிபிஞ்சுகளை விற்பனை செய்ய முடியும். நடமாட்டம் இல்லாததால் வெள்ளரிப்பிஞ்சுகளை பறிக்காமல் விட்டு விட்டனர். இதனால் வெள்ளரிக்காய் முற்றிலும் பழுக்க தொடங்கி விட்டது.
தற்போது ஆங்காங்கே வெள்ளரிப்பழங்கள் அறுவடையும் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான பழங்கள் அழுகியும் காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள்.
விலைவீழ்ச்சி
தஞ்சையை அடுத்த காட்டூர் பகுதியில் வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயி முருகேசன் கூறுகையில், “ஊரடங்கால் நாங்கள் வெள்ளரிக்காய்களை பறிக்கவில்லை. தற்போது அது பழமாகி விட்டது. இந்த பழங்களை சந்தைக்கு எடுத்துச்சென்றாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சாதாரண நாட்களில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பழங்களை தற்போது ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்து வருகிறோம்.
பறித்து, சந்தைக்கு எடுத்துச்செல்வதற்கு கூட சிரமம் இருப்பதால் நாங்களே சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்கிறோம். அதுவும் கேட்ட விலைக்கு கொடுத்து வருகிறோம். ஏற்கனவே சாகுபடி செய்வதற்கு ஆன செலவை கூட தற்போது எங்களால் எடுக்கமுடியவில்லை. தண்ணீரை கூட விலைக்கு வாங்கித்தான் பாய்ச்சி வருகிறோம். இதனால் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம்.” என்றார்.