அரியலூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா, எம்.எல்.ஏ.க்கள் ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), ஆர்.டி.ராமச்சந்திரன்(குன்னம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் குறைவாக இருந்த கொரோனா தொற்று தற்போது வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மூலம் சற்று அதிகமாகியுள்ளது.
மாவட்ட நிர்வாகம், வெளியூர்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்து முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் போன்ற தீவிர நோய் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்து சென்று கண்காணிக்கப்படுவார்கள்.
எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படுவார்கள். அவர்களுக்கு ஏதாவது அவசர தேவைகள் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.