வேலூரில், டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்- பா.ம.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது

வேலூர் காகிதப்பட்டறையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-07 22:00 GMT
வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 65 டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட 45 கடைகள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளின் முன்பு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்கள் வாங்கி செல்லவும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

வேலூர் மாநகரில் காகிதப்பட்டறை, பழைய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. வேலூர்-ஆற்காடு சாலை உழவர்சந்தை அருகேயுள்ள உயர்ரக மதுபான (எலைட்) விற்பனை கடை, செங்காநத்தம், புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன. காலை 8 மணி முதல் குடிமகன்கள் உற்சாகமாக டாஸ்மாக் கடைகளின் முன்பு குவிந்தனர். சிலர் அதிகாலையிலேயே ஆதார் அட்டையுடன் கடையின் முன்பாக காத்திருந்தனர்.

வேலூர்-ஆற்காடு சாலையோரம் உள்ள எலைட் மதுவிற்பனை கடையை திறக்க காகிதப்பட்டறையை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் வேலு (வயது 53), ம.தி.மு.க. பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (52), வினோத்குமார் (37), ராஜேஷ் (30) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் கடையின் முன்பு நின்று கடையை திறக்கக்கூடாது என்று கூறி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் இங்கு வந்து மதுபாட்டில்கள் வாங்கி செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று தெரிவித்தனர்.

அதற்கு போலீசார், இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கிடையாது. எனவே டாஸ்மாக் கடை திறக்கலாம் என்று கூறினர். அதனை ஏற்காத 4 பேரும், நீங்கள் கடையை மூடாவிட்டால் நாங்கள் கடைக்கு பூட்டு போடுவோம் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்