மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு: தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-08 02:51 GMT
திருச்சி, 

மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில், தேவையின்றி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்றும், அதை மீறி அரசு திறந்தால் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, திருச்சி கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள தி.மு.க. அலுவலகம் முன் மாநில முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில், நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்பட தி.மு.க.வினர் பலர் கருப்பு சட்டை அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்தும் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

எம்.எல்.ஏ.க்கள்

இதுபோல் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. பழைய பால்பண்ணை விஸ்வாஸ் நகரில் உள்ள அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து தி.மு.க.வினர் அவரவர் வீடுகளுக்கு முன்பு கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. மால்வாய் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் முன் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல் புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் ரசியா, புள்ளம்பாடி, கல்லக்குடி பேரூர், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களின் வீடுகள் முன்பு கண்டன கோஷமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதுபோல் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள தி.மு.க நிர்வாகிகள் அவரவரின் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தொட்டியம் காவல்நிலையம் அருகே திருச்சிவடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் ம.தி.மு.க. சார்பில் புத்தூர் அக்ரஹாரம் அருகில் திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையிலும், சமயபுரம் நால் ரோட்டில் ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன் தலைமையிலும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கருப்புச்சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள்

இ.பி.ரோடு வேதாத்ரி நகரில் குடியிருப்பு வீடுகள் மத்தியில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமையிலும், திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் கருப்புக்கொடி கட்டியும், ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி உறையூர் கடை வீதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உறையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதியம் விடுவிக்கப்பட்டனர்.

மணப்பாறை

இதுபோல் மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினரும், கோவில்பட்டி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மற்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காமராஜர் சிலை அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல் பல்வேறு கட்சியினரும் தங்களின் வீடுகளின் முன்பு நின்று கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.

இதுபோல் ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீரங்கத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் காங்கிரசார் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்