பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் 2 பேர் கைது

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-05-07 04:29 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் நேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் ஆயுதப்படை போலீசார் 5 பேர், மேலும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், போலீசார் ராஜி, ரஞ்சித், முத்துக்குமார் ஆகியோர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி வேன் ஒன்று வந்தது. அந்த வேனின் முகப்பு கண்ணாடியில் காய்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் என எழுதப்பட்டு இருந்தது. வேனில் போலீசார் சோதனைச் செய்தனர். அதில் முட்டைகோஸ், காலிபிளவர் மூட்டைகளுக்கு நடுவே மறைத்து 20 மூட்டைகளில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

வேலூரை சேர்ந்தவர்கள்

போதைப் பொருட்கள், காய்கறி மூட்டைகளுடன் வேனை பள்ளிகொண்டா போலீசுக்கு அனுப்பி வைத்தனர். கடத்தி வரப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்டு வேனில் வந்தவர்கள் வேலூர் சைதாப்பேட்டை சின்ன அண்ணா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த இப்ராஹிம் (வயது 40), தேவராஜ்நகர் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த சையத்ஜாபர் (24) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வேன், காய்கறிகள், போதைப் பொருள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்