தியாகதுருகம் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு

தியாகதுருகம் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.

Update: 2020-05-07 02:12 GMT
கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள அசகளத்தூர், கூத்தக்குடி, விருகாவூர், எறஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 38 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இவர்களை சின்னசேலம் அருகே வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த 11 பேருக்கும் கூத்தக்குடியை சேர்ந்த 7 பேர் மற்றும் விருகாவூரில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா அசகளத்தூர், கூத்தக்குடி கிராமங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் கிருமிநாசினி தெளித்தல், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்குதல், பிளச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதும் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களுக்கு கைகளை கழுவும் முறை, முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

அப்போது சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரெத்தினமாலா, வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேல்முருகன், இந்திராணி கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் கனகபூரணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்