ஆட்டோ-வாடகை கார் டிரைவர்களுக்கு தலா ரூ.5,000: ரூ.1,610 கோடியில் நிதி உதவி தொகுப்பு திட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் ரூ.1,610 கோடியில் நிதி உதவி தொகுப்பு திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார். ஆட்டோ-வாடகை கார் டிரைவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று முதல்-மந்திரி கூறியுள்ளார்.

Update: 2020-05-07 00:27 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கால் ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கர்நாடக அரசை வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் வழங்க ரூ.1,610 கோடிக்கு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.1,610 கோடி நிதி உதவி தொகுப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக அமலில் உள்ள இந்த ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அதனால் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், சிறுதொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என அனைத்து தரப்புக்கும் உதவும் நோக்கத்தில் ரூ.1,610 கோடிக்கு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை அறிவிக்கிறேன்.

அதன்படி ஊரடங்கால், பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் அதை விற்க முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை அழித்துவிட்டனர். மாநிலத்தில் சுமார் 11 ஆயிரத்து 687 எக்டேர் பரப்பளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டன. பூ விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து, பூ விவசாயிகளுக்கு எக்டேருக்கு நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம். அதிகபட்சமாக ஒரு எக்டேர் வரைக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

சலவை தொழிலாளர்கள்

காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்த விவசாயிகளும், அவற்றுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம். கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் மட்டும் பாதிக்கவில்லை. முடி திருத்தும் தொழில் செய்வோர், சலவை தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். அதாவது 60 ஆயிரம் சலவை தொழிலாளர்கள், 2 லட்சத்து 30 ஆயிரம் முடி திருத்தும் தொழில் செய்வோர் இந்த திட்டத்தின் பயனை பெறுவார்கள். ஊரடங்கால் ஆட்டோ-வாடகை கார் டிரைவர்கள் தங்களின் வருமானத்தை இழந்துவிட்டனர்.

தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை

கர்நாடகத்தில் 7.75 லட்சம் ஆட்டோ- வாடகை கார் டிரைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், கடுமையான உற்பத்தி பாதிப்பை சந்தித்து உள்ளன. இந்த சிக்கலில் இருந்து அந்த தொழில்கள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சிறிது காலம் ஆகும்.

அதனால் அந்த நிறுவனங்களுக்கு உதவ அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டணத்தை 2 மாதங்களுக்கு (ஏப்ரல்-மே) தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளோம். பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்துவதை 2 மாதங்கள் ஒத்திவைக்கப்படும். இதற்கு வட்டியோ அல்லது அபராதமோ விதிக்க மாட்டோம்.

ஊக்கத்தொகை

குறித்த காலத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்தும் அனைத்து தரப்பு மின் நுகர்வோருக்கும் ஊக்கத்தொகையும், சலுகையும் வழங்கப்படும். தாமதமாக செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு வட்டி குறைக்கப்படும். மேலும் மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நிலுவையில் இருக்கும் மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்படும். மின் கட்டண நிலுவைத்தொகையை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு இந்த மாதம் இறுதி வரை துண்டிக்கப்படாது. பொருளாதார சரிவால் நெசவாளர்கள் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் ஊரடங்கால் அந்த நெசவாளர்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.

கைத்தறி நெசவாளர்கள்

நெசவாளர்களின் வங்கி கடனை தள்ளுபடி செய்வதாக நான் ஏற்கனவே அறிவித்தேன். அதற்கு முதல் கட்டமாக ரூ.29 கோடியை விடுவித்தேன். மீதமுள்ள ரூ.80 கோடி விரைவில் விடுவிக்கப்படும். நெசவாளர்கள் புதிதாக கடன் பெற இது உதவியாக இருக்கும். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதே ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை கடனை செலுத்தியவர்களுக்கு அந்த தொகை நேரடியாக வழங்கப்படும்.

நெசவாளர்கள் சம்மான் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் 54 ஆயிரம் நெசவாளர்கள் பயன் பெறுவார்கள். கர்நாடகத்தில் 15.80 லட்சம் பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 11.80 லட்சம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் வரவு

மீதம் உள்ள 4 லட்சம் தொழிலாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விவரங்கள் கிடைத்ததும், அந்த தொகையை செலுத்துவோம். அதை தவிர கட்டிட தொழிலாளர்களுக்கு மேலும் தலா ரூ.3,000 வழங்க முடிவு செய்துள்ளோம். இது அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலே குறிப்பிடடுள்ள மொத்த தொகுப்பு திட்டத்தின் பயன்கள் நெருக்கடியில் உள்ள மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்