1½ ஆண்டுக்கு பிறகு செயல்பட்ட சிவகங்கை கிராபைட் ஆலை - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
1½ ஆண்டிற்கு பிறகு சிவகங்கை கிராபைட் ஆலை மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த கோமாளிபட்டியில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மூலம் கிராபைட் தாதுவை வெட்டி எடுத்து சுத்திகரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை சுற்றுப்புற சூழல் அனுமதி இல்லாததால் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படவில்லை. இதைதொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் முயற்சியால் மீண்டும் அனுமதி கிடைத்து நேற்று முதல் ஆலை செயல்பட தொடங்கி உள்ளது.
இதன் தொடக்கவிழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன் ஆலை செயல்பாட்டினை தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கையை அடுத்த சேந்திஉடையநாதபுரம், குமாரப்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்களில் 236.85 எக்டேர் பரப்பளவில் பூமிக்கடியில் கிராபைட் தாது கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கிராபைட் உலகிலேயே சிறந்ததாக கூறப்படுகிறது. கிராபைட் தாது அதிக வெப்பத்தை தாங்க கூடியது. இந்த கிராபைட் தாது மூலம் பென்சில் முதல் ஆகாய விமானத்திற்கு தேவையான பாகங்கள் மற்றும் தங்கத்தை உருக்க பயன்படும் குருசிபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். தற்போது இங்கு 96 சதவீதம் வரை சுத்தமான கிராபைட் தாது கிடைக்கிறது. இந்த பணி கடந்த 1987-ம் ஆண்டு முதல் தொடங்கியது. 1994-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மூலம் ரூ.28 கோடி மதிப்பில் கிராபைட் சுத்திகரிப்பு ஆலை கட்டமைக்கப்பட்டது.
இந்த கிராபைட் ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.136 கோடிக்கு லாபம் ஈட்டியுள்ளது. கிராபைட் சுரங்கத்தில் இருந்து ஒரு ஆண்டில் 60 ஆயிரம் டன் கிராபைட் தாது உற்பத்தி என்பதை உயர்த்தி 1,05,000 டன் உற்பத்தியை எட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கடந்த 25.2.2020 அன்று பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை 23.3.2020 அன்று பெறப்பட்டு மீண்டும் சுரங்கப் பணியும், கிராபைட் சுத்திகரிப்பு பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சுரங்கம் மற்றும் கிராபைட் சுத்திகரிப்பு ஆலையில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பினை பெறுகின்றனர்.
கருப்பு தங்கம் என சிவகங்கை மாவட்ட மக்களால் அழைக்கப்படும் இந்த கிராபைட் சுரங்கம் அதன் சுத்திகரிப்பு ஆலையின் மூலமாக தமிழ்நாடு கனிம நிறுவனம் மாதம் ஒன்றுக்கு ரூ.2 கோடி வருவாய் ஈட்டக்கூடிய அளவிற்கு இதன் செயல்பாடு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் கனிம நிறுவன மேலாளர்கள் முத்துசுப்பிரமணியன்,ஹேமந்த்குமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளாபாலசந்தர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் சசிக்குமார், சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் கோமதி மணிமுத்து, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பலராமன்,ஜெயப்பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.