மும்பை நகரில் ஊரடங்கு தளர்வு அதிரடி ரத்து - மதுக்கடைகளையும் மூட உத்தரவு

மும்பையில் ஊரடங்கு தளர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதன்படி மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-05-05 23:33 GMT
மும்பை,

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மளிகை, காய்கறி கடை போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டன. இந்த தளர்வுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன்படி மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய தேவைகள் இல்லாத கடைகளும் திறக்கப்பட்டது. இதில் மதுக்கடைகளும் அடங்கும்.

ஆனால் ஒரு தெருவில் அத்தியாவசிய தேவைகள் இல்லாத கடைகள் அதிகபட்சம் 5 மட்டுமே திறந்து இருக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

காற்றில் பறந்த சமூக இடைவெளி

அதன்படி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் மும்பையிலும் மதுக்கடைகள் உள்பட அத்தியாவசிய தேவைகள் இல்லாத கடைகள் திறக்கப்பட்டன. சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மதுக்கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. பல இடங்களில் கி.மீ. நீளத்துக்கு மதுபிரியர்கள் மதுக்கடைகள் முன் வரிசையில் நின்றனர். மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்துவதே போலீசாருக்கு மிகப்பெரிய வேலையானது. இதையடுத்து மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியதற்கு பலர் அரசை சமூகவலைதளத்தில் விமர்சித்து இருந்தனர்.

அதிரடி நடவடிக்கை

இந்தநிலையில் மும்பையில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி கிடையாது என நேற்று இரவு மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசி வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத அளவுக்கு கடைகளில் கூட்டம் கூடியதை செய்தி நிறுவனங்கள் மற்றும் போலீசார் கொடுத்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக உள்ள மும்பையில் மேலும் நோய் பரவி ஊரடங்கிற்கான பலன் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி அஞ்சுகிறது.

இன்று முதல் ரத்து

எனவே ஊடரங்கில் ெசய்யப்பட்ட தளர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் திரும்ப பெறப்படுகிறது. அதன்படி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் திறக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாத கடைகளும் மூடப்படும். இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதை அந்தந்த பகுதி சீனியர் இன்ஸ்பெக்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மளிகை கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் வழக்கம் போல திறந்து இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

3-வது கட்ட ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அது வரை மாநகராட்சியின் இந்த புதிய உத்தரவு அமலில் இருக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்