மராட்டியத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள் - பலி 617 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பலி எண்ணிக்கை 617 ஆக அதிகரித்து இருக்கிறது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் ஆட்கொல்லி நோய் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் ஒரேநாளில் மேலும் 635 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 515 ஆகும். மற்ற 120 பேருக்கு 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை சோதனை செய்யப்பட்டு தற்போது முடிவுகள் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதாவது நிதிதலைநகரில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 758 ஆகி உள்ளது. இதேபோல மும்பையில் மேலும் 26 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 387 ஆகி உள்ளது.
15 ஆயிரத்தை தாண்டியது
இதேபோல மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது நேற்று மாநிலம் முழுவதும் 841 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 525 ஆகி உள்ளது.
இதேபோல மராட்டியத்தில் ஒரேநாளில் 34 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள்.
இதுவரை மராட்டியத்தில் 617 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுதவிர 2 ஆயிரத்து 819 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.