மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம்,
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணை
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரம் மேட்டூர் அணையாகும். தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையையும் மேட்டூர் அணை மூலம் சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெல்டா பாசன பகுதியின் முக்கியமான சாகுபடி காலமாகவும், ஜீவாதார பருவமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய குறுவை சாகுபடி பருவம் விளங்கி வருகிறது.
காவிரி நீரை திறக்க வேண்டும்
இதன் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டுகளில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததாலும், போதிய மழை பெய்யாததாலும் டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் ஜூன் 6-ந்தேதியே காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், இந்தாண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூர்வாரும் பணிகள்
எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களை நவீனபடுத்தும் பணியை உடனே தொடங்க வேண்டும். கிளை வாய்க்கால்களில் ரெகுலேட்டர்கள், பாசன மதகுகள் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை தண்ணீர் வருவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.