சேதுபாவாசத்திரம் அருகே பெண்ணுக்கு கொரோனா: 74 பேருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை

சேதுபாவாசத்திரம் அருகே பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 74 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-05-05 22:36 GMT
சேதுபாவாசத்திரம்,

சேதுபாவாசத்திரம் அருகே பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 74 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்திருப்பதாக சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

பெண்ணுக்கு கொரோனா

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள முடச்சிக்காடு ஊராட்சி கலைஞர் நகர் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது கடந்த 27-ந்தேதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பெண் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து கலைஞர்நகர் பகுதியில் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன்புஷ்பராஜ், பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் சுகாதாரத்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

உறவினர்கள்-நண்பர்கள்

பின்னர் சமத்துவபுரம் பகுதிக்குள் வெளிஆட்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது உறவினர்கள், நண்பர்கள் என 74 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று கண்டறிவதற்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு தஞ்சையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்