நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள் உள்பட 15 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள் உள்பட மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சேலம், தர்மபுரியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஏற்கனவே 50 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.
இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் அருகே உள்ள தாத்திபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் நேற்று குணமாகி வீடு திரும்பினார். எனவே இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்து உள்ளது. மீதமுள்ள 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று புதிதாக நாமகிரிப்பேட்டை அண்ணா காலனியை சேர்ந்த 23 வயது கர்ப்பிணி மற்றும் மோளபள்ளிப்பட்டி பாலிக்காடு பகுதியை சேர்ந்த 25 வயது கர்ப்பிணி என 2 கர்ப்பிணிகள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் புதுச்சத்திரம் அருகே உள்ள லக்கியம்பட்டியை சேர்ந்த 4 ஆண்கள், ஈரோட்டை சேர்ந்த 23 வயது வாலிபர், தேவாங்கபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் மற்றும் லாரி டிரைவர்களான நாமக்கல் ரெட்டிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த 24 வயது வாலிபர், காரைகுறிச்சிபுதூரை சேர்ந்த 42 வயது நிரம்பிய நபர், ரெட்டிப்புதூரை சேர்ந்த 46 வயது நிரம்பிய நபர், திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 36 வயது நிரம்பிய நபர், பள்ளிபாளையம் அருகே உள்ள ரெங்கனூரை சேர்ந்த 45 வயது நிரம்பிய நபர், கலங்காணியை சேர்ந்த 50 வயது நிரம்பிய நபர் ஆகியோரும் அடங்குவார்கள். இவர்களில் 14 பேர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 737 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் 35 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலம் சென்று திரும்பிய 3,322 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தவும், ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ள பகுதிகளுக்கு போலீசார் ‘சீல்’ வைத்து உள்ளனர். அப்பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
சேலம்
சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், கர்ப்பிணிகள், தாய்-மகன் என 33 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 24 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது சென்னையில் இருந்து வருபவர்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த 35 வயதுடைய ஒருவர் சமீபத்தில் சேலம் மாவட்டம் கெங்கவல்லிக்கு வந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை எடுத்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கடைமடை பகுதியை சேர்ந்த 40 வயது காய்கறி வியாபாரி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 3-ந்தேதி சென்னையில் இருந்து லாரி மூலம் கடைமடைக்கு வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தர்மபுரியில் ஏற்கனவே ஒரு லாரி டிரைவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது காய்கறி வியாபாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவருக்கும், 60 வயதுடைய பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முதல் முறையாக 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அந்த அந்தஸ்தை இழந்து ஆரஞ்சு மண்டலமானது. நேற்று அந்த 2 பெண்களும், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.