பள்ளிபாளையம் அருகே கொரோனா பாதித்த பகுதியில் கலெக்டர் ஆய்வு

பள்ளிபாளையம் அருகே கொரோனா பாதித்த பகுதிகளில் கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2020-05-05 23:00 GMT
பள்ளிபாளையம், 

பள்ளிபாளையம் அருகே தேவாங்கபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய டிப்ளமோ பட்டதாரி, மும்பையில் வேலை செய்து வந்தார். ஊரடங்கு அமலில் இருந்ததால் அவர் மும்பையில் இருந்து கடந்த 2-ந் தேதி தனது சொந்த ஊருக்கு வந்தார். ஊர் திரும்பிய மறுநாள் அவர் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு சென்றார். அவரின் ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

இதேபோல் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் ஒருவரும், அவருடைய தம்பியும் மும்பையில் இருந்து லாரி மூலம் கடந்த 2-ந் தேதி பள்ளிபாளையத்துக்கு வந்தனர். அவர்களும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபருக்கும், டிப்ளமோ பட்டதாரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதேபோல் வெப்படை அருகே ரங்கனூர் பகுதியை சேர்ந்த 43 வயது லாரி டிரைவர் மற்றும் ஒருவரும், ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கேரள மாநிலத்திற்கு வாடகைக்கு லாரியை ஓட்டிச்சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து குமாரபாளையம் வழியாக தங்கள் சொந்த ஊரான ரங்கனூருக்கு வந்தனர். அவர்கள் இருவரும் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இதில் லாரி டிரைவருக்கு தொற்று உறுதியானது.

பள்ளிபாளையம் அருகே உள்ள ஆண்டிக்காடு, தேவாங்கபுரம், ரங்கனூர் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடியிருப்புகளை சுற்றி உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தேவாங்கபுரம் பகுதியில் உள்ள தெரு ஒன்றை தகரத்தால் அடைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பகுதிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா? என்று உடல்நிலை குறித்த விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பதையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செந்தில், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், குமாரபாளையம் தாசில்தார் தங்கம் உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பள்ளிபாளையம் பகுதியில் லாரி டிரைவர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆயக்காட்டூர், ஓடப்பள்ளி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் லாரி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி உள்ளனர். இந்த பகுதியில், காகித ஆலை, சர்க்கரை ஆலை உள்ளது. அந்த ஆலைகளுக்கு மரக்கட்டைகள், கரும்பு லோடுகள் ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிகளவில் வருகிறது. குறிப்பாக நீண்ட தூரத்தில் இருந்து வரும் லாரி டிரைவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்ற பயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாரிகள் வருவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 2 கர்ப்பிணிகள் உள்பட மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்து உள்ளது. இதையொட்டி, தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்றான நாமக்கல் அருகே உள்ள காரைக்குறிச்சிபுதூரில் வருவாய்துறையினர் சாலையில் தடுப்பு அமைத்து மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்