ஊரடங்கு தளர்வு: கடைவீதிகளுக்கு படையெடுத்த மக்கள்
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் கடைவீதிகளுக்கு மக்கள் படையெடுத்து வந்தனர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் கடைவீதிகளுக்கு மக்கள் படையெடுத்து வந்தனர்.
கடைகள் திறப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ், ரெயில் போக்குவரத்து தவிர சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முதல் இந்த தளர்வு அமலுக்கு வந்தது. புதுக்கோட்டையை பொறுத்தவரை கீழ ராஜவீதி, தெற்கு ராஜ வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளில் ஏராளமான கடைகள் உள்ளன.
ஊரடங்கையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்திருந்தன. பகல் 1 மணிக்கு மேல் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வு அளிக்கப்பட்டதால் சிறிய ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், செருப்பு கடைகள், இரும்பு கடைகள், வாகன பழுது பார்க்கும் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ளிட்ட கடைகள் 40 நாட்களுக்கு பின் நேற்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன.
படையெடுத்த மக்கள்
கடைகளை திறந்த அதன் உரிமையாளர்கள் உள்ளே தூசி படிந்திருந்ததை அகற்றிவிட்டு வியாபாரத்தை தொடங்கினர். கடையில் பணியாற்றிய ஊழியர்கள் முககவசம் அணிந்திருந்தனர். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடைவீதிக்கு நேற்று படையெடுத்து வந்தனர். இரு சக்கர வாகனங்கள், கார்களில் வந்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் கடைவீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதுநாள் வரை வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்தனர். இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பொதுமக்கள் பலர் முககவசம் அணிந்திருந்தனர். சிலர் முக கவசம் அணியவில்லை. சில இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. சாலையில் இரு சக்கர வாகனங்களில் சாரை, சாரையாக சென்றவர்களை பார்த்து இதுவரை கடைபிடித்திருந்த தடுப்பு நடவடிக்கைகளை இவர்கள் வீணடித்து விடுவார்களோ? என்று சிலர் பேசியதை கேட்க முடிந்தது. மேலும் கடைவீதியில் திரண்ட கூட்டத்தை பார்த்ததும் வேதனை அடைந்தனர்.
இயல்பு வாழ்க்கைக்கு...
கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதை தடுக்க அமலில் இருந்த ஊரடங்கு தான் தளர்த்தப்பட்டுள்ளதே தவிர அந்த வைரசின் தாக்கம் குறையவில்லை என்பதை மக்கள் உணரவில்லையே என்று சிலர் கவலை அடைந்தனர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிலர் தகர்த்தெறிந்து விட்டனர் என்றனர்.
அரசு அறிவித்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் இன்னும் கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறினர். 40 நாட்கள் முடங்கி கிடந்தவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியே வந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதை போல வரத்தொடங்கினர்.
அதிகாரிகள் ஆய்வு
ஊரடங்கு தளர்வுக்கு முன்பு இரு சக்கர வாகனங்கள், கார்களை மறித்து அத்தியாவசிய தேவைக்கு தவிர வெளியில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்த பின்பும் போலீசார் தங்களது பணியை மேற்கொண்டனர். இருந்தாலும் அதனையும் மீறி வாகனங்களில் பலர் சென்றனர். காலை 9 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கு மூடப்பட்டன. ஓட்டல்கள் மட்டும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன.
பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. கடைவீதிகளில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் கீழ ராஜ வீதியில் அடைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு அறிவித்தபடி முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் இருந்தன.