உழைக்கும் வர்க்கத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு - முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்
கர்நாடகத்தில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். சமூக ரீதியாக தொழில் செய்யும் அந்தந்த சமூக பிரதிநிதிகள் என்னை நேரில் சந்தித்து, தங்களின் கஷ்டங்களை என்னிடம் தெரிவித்தனர்.
அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நடத்தும் கூலித்தொழிலாளர்கள், ஒரு வேளை உணவுக்கே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சரக்கு-சேவை வரி திட்டம் மற்றும் பணமதிப்பிழப்பு திட்டம் போன்றவற்றால் ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கொரோனா வந்து, நமது பொருளாதாரத்தை நாசப்படுத்தியுள்ளது.
நெசவாளர்கள்
கோடை காலத்தில் திருமணம், திருவிழா, மக்கள் சுற்றுலா செல்வது போன்றவை அதிகமாக நடைபெறும். இதன் மூலம் விஸ்வகர்மா, நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்கிறவர்கள், இந்த கோடை காலத்தில் அதிகமாக சம்பாதித்து ஆண்டு முழுவதும் வாழ்க்கையை நடத்துவார்கள். ஆனால் கொரோனா அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது.
நகர்மயமாதல் காரணமாக சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஆட்டோ, வாடகை கார், பஸ் போன்றவற்றுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி கர்நாடகத்தில் சுமார் 25 லட்சம் பேர் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சம்பாதிக்க வேண்டிய இந்த காலக்கட்டத்தில் ஊரடங்கால், அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள்
தனியார் பெரு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்தபடியே பணியாற்றும்படி கூறியுள்ளது. இதனால் வாடகை கார் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 2 கோடி பேர் உள்ளனர். தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், பழைய நிலை திரும்ப இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
அதனால் இந்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு மத்திய-மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். இந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள், சாதி அடிப்படையில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவது போல் மாதம் 10 கிலோ அரிசி, பால், 2 லிட்டர் சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்பட 16 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க வேண்டும்.
இலவச உணவு
இந்திரா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் மேற்கூறிய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஆட்டோ-வாடகை கார்களின் உரிமையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். வாகன காப்பீட்டு தொகையை அரசே செலுத்த வேண்டும்.
இந்த ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராதம் வசூலிக்காமல் அதன் உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும். மேலே குறிப்பிட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நெசவாளர்கள் நெய்த துணிகளை விற்பனை செய்ய சந்தை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். புகைப்பட கலைஞர்கள் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு வீட்டு வாடகை வழங்க வேண்டும். அவர்கள் வாங்கிய கடன் மீதான வட்டியை ரத்து செய்ய வேண்டும்.”
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.