தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கழிவு நீரில் கொரோனா வைரஸ் இறந்த செல்கள் கண்டுபிடிப்பு

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக சென்னையில் கழிவு நீரை பரிசோதித்ததில் கொரோனா வைரசுக்கான இறந்த செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவ வாய்ப்பு இல்லை என்றும் தெரியவந்து உள்ளது.

Update: 2020-05-04 22:41 GMT
சென்னை,

சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் சென்னையில் சேகரிக்கப்படும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் எந்த அளவு இருக்கிறது? என்று கணக்கிடுவதற்காக சென்னையில் உள்ள ராயபுரம், பெருங்குடி, அடையாறு, நெசப்பாக்கம், கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகள் சேகரித்தது. இதில், கொரோனா வைரஸ் இருக் கிறதா? என்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட 2 பரிசோதனை கூடங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

முதல் கட்ட ஆய்வின் ஒரு பகுதியாக சென்னையில் சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரசுக்கான இறந்த செல்கள் இருப்பதை சென்னை குடிநீர் வாரியம் கண்டறிந்து உள்ளது. பொதுவாக கழிவு நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகள் கழிவு நிரில் காணப்படும் வைரசை கொன்று விடுகிறது.

தெற்கு ஆசியாவில் முதன்முறை

சென்னை குடிநீர் வாரியம், உலக சுகாதார அமைப்புடன் கூட்டு சேர்ந்து ஒரு ஆய்வை உருவாக்கி, கழிவு நீர் கண்காணிப்பு மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளது. கொரோனா வைரசின் இறந்த செல்கள் வெற்றிகரமாக கழிவு நீரில் கண்டறியப்பட்டது நம் நாட்டில் மட்டும் அல்லாது தெற்கு ஆசியாவிலேயே இது முதன் முறையாகும்.

கழிவு நீரில் நோய்த் தொற்றுகள் காணப்பட்டால், அந்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவுதற்காக காரணங்களை அடையாளம் காண்பதுடன், கிருமி நாசினிகள் தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் இறங்குவதற்கு இது உதவும்.

நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை மேற்கோள் காட்டி, நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்று நாட்களுக்குள் இந்த நோயை கண்டுப்பிடித்து அழிக்க முடியும். நோய் தணிந்த பிறகும் கழிவுநீரை தொடர்ந்து கண்காணிப்பது தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்