தக்காளி விலை கடும் வீழ்ச்சி: கால்நடைகளை மேய விடும் அவலம்
கெலமங்கலம் அருகே தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து தோட்டத்தில் கால்நடைகளை மேய விடும் அவலம் இருந்து வருகிறது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, கெலமங்கலம் சுற்று வட்டாரங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். ராயக்கோட்டையில் தமிழகத்திலேயே பெரிய தக்காளி மண்டி உள்ளது. இங்கிருந்து சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் தக்காளி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் கோடை காலத்தில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் விலை குறைவாக காணப்படும்.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சந்தைகள் மூடப்பட்டு உள்ளதாலும், வாகன வசதி இல்லாததாலும் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்த வகையில் கெலமங்கலம் அருகே உள்ள மல்லேபாளையத்தில் தக்காளியை ஒரு கிலோ ரூ.1-க்கு கூட வாங்க ஆள் இல்லை. இதனால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். அவற்றை கால்நடைகளை விட்டு மேய விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு காரணமாக, மார்க்கெட்டுகள், சந்தைகள் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் இல்லை. மேலும் தக்காளியை பறிக்க கூலி ஆட்கள் கூட வருவதில்லை. அவ்வாறு தக்காளியை பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தால் பறிப்பதற்கு ஆகும் கூலி கூட கிடைப்பதில்லை. 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி தற்போது ரூ.50-க்கு போவதே சிரமமாக உள்ளது. விலை வீழ்ச்சி காரணமாக விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.
பல விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். அவற்றை ஆடு, மாடுகளை மேய விட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து உள்ளனர். எனவே அரசு எங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.