அரசின் உத்தரவை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

ஊரடங்கு தளர்வின் போது, அரசின் உத்தரவை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

Update: 2020-05-04 23:15 GMT
தூத்துக்குடி, 

தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவகையான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களை திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சிக்கு வெளிப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும், ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும், ஸ்பின்னிங் மில்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம். ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம்.

நகர் மற்றும் ஊரக பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறலாம். அவர்கள் ஒரு முறை மட்டும் அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்படும். அரசுத்துறை சம்பந்தமான அனைத்து கட்டிட பணிகளுக்கும் தடை இல்லை. வீட்டு வேலைகளுக்கு செல்லும் எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்றவர்கள் அரசு அனுமதி பெற்று இருக்க வேண்டும். அவர்கள் எந்த பகுதியில் இருந்து வருகிறார்கள், அவர்களுடைய உடல்நிலை என்ன? என்பதை கண்டறிந்த பின்பே அவர்களை அனுமதிக்க முடியும். அரசு வழங்கும் பாஸ் பெற்றுக்கொண்டு அவர்கள் பணிகளில் ஈடுபடலாம். வீட்டு வேலை செய்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் அரசின் பாஸ் பெற்றுக்கொண்டு தங்களது வேலைகளை தொடரலாம்.

கட்டுமான பொருட்கள்

கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். அவர்களுக்கு சரக்கு கொண்டு வரும் லாரிகளுக்கும் அனுமதியளிக்கப்படும். பிரிண்டிங் பிரஸ் திறப்பதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. பெரிய வணிக வளாகங்களில் இல்லாமல் தனியாக இருக்கும் கடைகளில், செல்போன், கண்ணாடி, வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் கடைகள் திறக்கலாம்.

இதுபோன்ற கடைகள் ரூரல் பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து 5 மணி வரையும், நகர பகுதிகளில் 10 மணியில் இருந்து 5 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. உணவகங்களில் பார்சல் கொடுக்க மட்டுமே அனுமதி.

நடவடிக்கை

தற்போது பொதுவாக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திறக்கப்படும் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் முககவசம் அணிந்து இருக்கவேண்டும். ஒரு வேளை அந்த கடைகளில் கூட்டம் அதிகமானால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு.

அந்த கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினிகளான சானிடைசர், ஹேண்ட் வாஷ் ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அந்த கடையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு உத்தரவை மதிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிமாநில தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு 3 வகையான பாஸ் வழங்கப்படுகிறது. இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிமாவட்டத்தில் இருந்து வந்து செல்ல முடியாதவர்கள் இந்த பாஸ் பெற்றுக்கொண்டு செல்லலாம்.

தொழிற்சாலைகள் நாளை(புதன்கிழமை) முதல் செயல்படுத்தலாம். அங்கு எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு பஸ், மருத்துவ உதவி மற்றும் சானிடைசர், சமூக பாதுகாப்பு இடைவெளி உள்ளிட்டவைகள் உள்ளதா? என்பது ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். அனுமதி வழங்கிய பின்னர் மாவட்ட அதிகாரிகள் அந்த தொழிற்சாலைகளை கண்காணிப்பார்கள். பொருளாதார வளர்ச்சிக்காகவே இந்த தளர்வு வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் சமூக பாதுகாப்பு இடைவெளி உள்ளிட்டவைகள் ஒரு அங்கமாகவே கடை பிடிக்கவேண்டும்.

இ-பாஸ்

பொதுமக்கள் பாஸ் வாங்க கலெக்டர் அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே இ-பாஸ் மூலம் பதிவு செய்து பெறலாம். அந்தந்த பகுதியில் உள்ள இசேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். செல்போன் போன் மூலமும் விண்ணப்பிக்கலாம். முறையான ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

தற்போது பொய்யான தகவல் அளித்து நிறைய பேர் அனுமதி வாங்கியவர்கள் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து பொய் தகவல் கூறி வருபவர்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அனுமதி கிடையாது

வணிக வளாகங்கள், மார்க்கெட் காம்ப்ளக்ஸ் திறக்க அனுமதி கிடையாது. தனி கடைகள் திறக்கலாம். அத்தியாவாசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கலாம். நகைக்கடைகள், ஜவுளி கடைகள் திறக்க அனுமதி இல்லை. இனிமேல் மாலை 5 மணி வரை கடை திறக்கலாம். கூட்டம் அதிகமானால் சீல் வைக்கப்படும். டீக்கடைகளுக்கு அனுமதியில்லை. போட்டோ ஸ்டூடியோக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகள் திறப்பதால் வட மாநில தொழிலாளர்கள் தற்போது வேலைக்கு செல்லலாம்.

சென்னையில் இருந்து நேற்று ஒரே நளில் 600 பேர் வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களும், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களும் சிறப்பு பரிசோதனைக்காக தனிமைப்பகுதி மையம் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்படுவார்கள்

நாள் ஒன்றுக்கு 250 பேருக்கு கொரானா சோதனை செய்யப்படுகிறது. இதுவரை 4126 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 200 படுக்கைகளும், எட்டையாபுரம், கோவில்பட்டி, வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் 100 படுக்கைகளும் சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து பாஸ் பெற்று வந்தால் வீட்டில் தனிமைப் டுத்தப்படுவார்கள். பாஸ் இல்லாமல் வந்தால் தனிமை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. சில மாவட்டங்களில் இல்லாமல் இருந்து பின்னர் கூடிவிட்டது. நாமும் அலட்சியப்படுத்தி வெளியில் சுற்றினால் நமக்கும் இதே நிலைதான் ஏற்படும். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பகுதிகள் திறந்து விடப்பட்டுள்ளது. போன்டன்புரம் பகுதி வருகிற 7-ந் தேதி திறந்து வைக்கப்படும். மற்ற பகுதிகள் 18-ம் தேதிக்கு பிறகு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்