புதிதாக தேர்வான பெண் போலீசாருக்கு பயிற்சி தொடங்கியது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிப்பு

புதிதாக தேர்வான பெண் போலீசாருக்கு பயிற்சி தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் கடைபிடித்தனர்.

Update: 2020-05-04 05:51 GMT
புதுக்கோட்டை, 

புதிதாக தேர்வான பெண் போலீசாருக்கு பயிற்சி தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் கடைபிடித்தனர்.

பெண் போலீசார்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போலீசாரின் பாதுகாப்பு பணி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாரை பணிக்கு வர அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் இதற்கான பணிகள் நேற்று நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 127 பெண் போலீசார் தங்களது உடைமைகளுடன் நேற்று காலையிலே வந்தனர். அவர்களுடன் பெற்றோர், உறவினர்கள் வந்திருந்தனர். தற்போது கொரோனா பீதியாக இருப்பதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் கடைபிடித்தனர். ஆயுதப்படை மைதான நுழைவு வாயிலில் முழு கவச உடை அணிந்த 2 பேர் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு வந்த பெண் போலீசார் மீதும், அவர்களது உடைமைகள் மற்றும் உடன் வந்தவர்கள் மீதும் கிருமி நாசினியை தெளித்தனர்.

சமூக இடைவெளி

புதிதாக தேர்வான அனைவரது சான்றிதழ்களையும் போலீசார் சரிபார்த்து அனுமதித்தனர். இந்த பணியின் போது சமூக இடைவெளி கடை பிடிக்கப்பட்டது. மேலும் பெண் போலீசார் வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளி விட்டு நின்றனர். புதிய பெண் போலீசாருக்கு பயிற்சி நேற்று முதல் தொடங்கியது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பார்வையிட்டார். மேலும் அவர்களுக்கு அறிவுரைகளை கூறினார். புதிய பெண் போலீசாருக்கு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் எனவும், அதன்பின் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் 127 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறினர்.

மேலும் செய்திகள்