மாவட்டத்தில் 13 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ஊரடங்கை மீறியதாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கில் மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-05-04 05:41 GMT
புதுக்கோட்டை, 

ஊரடங்கில் மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாராய ஊறல்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறியவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடி உள்ள நிலையில் சாராயம் காய்ச்சும் கலாசாரம் தலை தூக்க தொடங்கியது. இதனை போலீசார் தீவிர வேட்டை நடத்தி களையெடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 13 ஆயிரத்து 338 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதேபோல 1,744 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

இதேபோல ஊரடங்கில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியவர்கள், தடையை மீறியவர்கள் என இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் 8 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்த வாகனங்களை அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இதனை மீறுபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்