வாடிக்கையாளர் போல வந்த தாசில்தார் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட ஓட்டலுக்கு ‘சீல்’
திருச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட ஓட்டலுக்கு கலெக்டர் உத்தரவின்படி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மலைக்கோட்டை,
திருச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட ஓட்டலுக்கு கலெக்டர் உத்தரவின்படி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கின்போது ஓட்டல்களில் யாரும் அமர்ந்து சாப்பிட கூடாது, பார்சல்கள் மட்டும் விற்பனை செய்யலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மேலப்புலிவார்டு சாலையில் உள்ள ஓட்டல் திறந்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அரசு உத்தரவை மீறி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதாகவும் கலெக்டர் சிவராசுவுக்கு ரகசிய தகவல் வந்தது.
வாடிக்கையாளர் போல...
இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பேரில், திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன் நேற்று இரவு அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர் போல் சென்று காபி வேண்டும் என கேட்டார். அதற்கு ஓட்டலில் இருந்தவர்கள் உள்ளே சென்று அமருங்கள் என கூறி இருக்கிறார்கள்.
தாசில்தார் உள்ளே சென்றபோது அங்கு சிலர் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். உடனே தாசில்தார் மோகன் தான் யார் என்பதை கூறி, சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். பின்னர் அந்த ஓட்டலின் கதவுகளை இழுத்து மூடி பூட்டி சீல் வைத்தார்.
இறைச்சி விற்ற 11 பேர் மீது வழக்கு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திடும் வகையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி செயல்பட்ட கடைகளில் நேற்று மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடையில் இருந்த தராசுகள் உள்பட பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் நேற்று திருச்சி மாநகர பகுதிகளில் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி மற்றும் மீன்கடைகளின் உரிமையாளர்கள் மீது கே.கே.நகர், காந்தி மார்க்கெட், செசன்ஸ் கோர்ட்டு, பொன்மலை, தில்லைநகர், கோட்டை, எடமலைப்பட்டிபுதூர், உறையூர், அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், பாலக்கரை போலீஸ் நிலையத்தில் 2 வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.