ஊரடங்கு தளர்வில் அரசு விதிமுறைப்படி அனுமதி வழங்கப்படும் கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் அரசு விதிமுறைப்படி அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

Update: 2020-05-04 02:15 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் அரசு விதிமுறைப்படி அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விதிமுறை தளர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதை நெல்லை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 3-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலங்களில் சில தளர்வுகளை அமல்படுத்திட தமிழக அரசு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.

ஆரஞ்சு மண்டலம்

தமிழகத்தில் நோய் தொற்று உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலத்தில் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்பட, அரசின் விதிமுறையின் படி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயக்கிடவும், பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏ.சி.மெக் கானிக், தச்சு வேலை செய்பவர்கள் உள்ளிட்டவர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பணி மேற்கொள்ளவும் அரசு ஆணையிடப்பட்டு உள்ளது.

விதிமுறை தளர்வு

இந்த தளர்வுகள், விதிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வுகள் செய்யப்படும். நோய் தாக்கம் குறைந்து வந்தாலும், பொதுமக்கள் நோயின் விளைவுகளை அறிந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவர்கள் முக கவசம் அணிவதோடு, ஒருவருக்கு ஒருவர் கூடி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் ஒருவருக்கும், மற்றொருவருக்கும் இடையே 3 அடி தூரம் இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் அவசர உதவி தேவைப்பட்டால் 108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

இந்த நோய் பரவுவதை தடுக்க வீட்டில் இருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்று முதல்-அமைச்சர் கேட்டு கொண்டதன் படி வீட்டை விட்டு வெளியே வராமல் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி இயக்குனர் (கனிம வளம்) சத்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் பட்டியல் அறிவிப்பு

இதற்கிடையே கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்த ஊர்களின் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் 33-வது வார்டு பகுதியில் உள்ள அசூரா கீழத்தெரு, அண்ணா வீதி, சப்பானி அலிம் கீழத்தெரு, மேலப்பாளையம் 37-வது வார்டு பகுதியில் உள்ள மேத்தமார்பாளையம் 1, 2, 3, 4 ஆகிய தெருக்கள், பத்தமடை வடக்கு ரதவீதி, காயிதேமில்லத் தெரு, கவர்னர் சாலை, பற்பகுளம் ஜான் டிவைன் சிட்டி” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்