சென்னையில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய முன் வர வேண்டும் குமரி கலெக்டர் வேண்டுகோள்

சென்னையில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-05-04 01:32 GMT
நாகர்கோவில், 

சென்னையில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடைகள்

குமரி மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பேக்கரிகள் வழக்கம்போல அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இயங்கும். மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவித்திருந்தாலும், ஒரே நேரத்தில் அனைத்து நிறுவனங்களையும் திறப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதி வழங்கப்படும். தனிக்கடைகள் வருகிற 9-ந் தேதி வரை திறக்க அனுமதி கிடையாது.

குமரியில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு மற்றும் மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய 4 பகுதிகள் ஏற்கனவே கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை சென்ற நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த நபர் வசித்த செறுதிகோணம் பகுதியை புதிதாக கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் அப்பகுதிகளுக்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து குமரி மாவட்டம் வந்தவர்கள், தாங்களாகவே முன்வந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 1077, 04652231077 ஆகியவற்றுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தொழிற்சாலைகள்

குமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊரக பகுதிகளில் மட்டும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை.

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்