நண்பர்கள் மோதலில் ஒருவர் சாவு; மற்றொருவர் படுகாயம் ஒருவருக்கொருவர் கத்தியால் குத்திக் கொண்டதால் பரபரப்பு
நாகர்கோவிலில் நண்பர்கள் மோதலில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நண்பர்கள் மோதலில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். மோதலின் போது ஒருவருக்கொருவர் கத்தியால் குத்திக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நண்பர்கள் மோதல்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்தி காலனியை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் வினோத் (வயது 23), டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெனிஸ்டன் (25). வினோத்தும், ஜெனிஸ்டனும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் கை கலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
கத்தியால் குத்திக் கொண்டனர்
இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் கோபத்தின் உச்சிக்கே சென்றதால், என்ன செய்வதென்று தெரியாமல், வெறிச்செயலில் ஈடுபட்டனர். அதாவது, இருவரும் கத்தியை எடுத்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்க தொடங்கியதாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் மாறி, மாறி கத்திக்குத்து விழுந்துள்ளது.
இந்த திடீர் தாக்குதலால் நண்பர்கள் 2 பேரும் அங்கேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதற்கிடையே சத்தம் கேட்டு, ஜெனிஸ்டனின் சகோதரர் வினிஸ்டன் (19) என்பவர் அங்கு வந்தார். அப்போது, கஷ்டப்பட்டு எழுந்த வினோத் அங்கிருந்து செல்ல முயன்றதாகவும், வினிஸ்டன் அவரை கத்தியால் குத்தி விட்டு ஓடியதாகவும் தெரிகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒருவர் சாவு
எனினும் சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், ஜெனிஸ்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வினோத்தின் தந்தை குணசேகர் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெனிஸ்டன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல ஜெனிஸ்டனின் தந்தை செல்வராஜ் ஒரு புகார் அளித்தார். அதில், தன் மகனை வினோத் கத்தியால் குத்தி கொல்ல முயன்றார் என்று கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வினிஸ்டனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினிஸ்டன், என்ஜினீயரிங் மாணவர்.
போலீஸ் விசாரணை
ஆனால் நண்பர்களுக்கு இடையே திடீரென என்ன பிரச்சினை ஏற்பட்டது? எதற்காக 2 பேரும் கத்தியால் குத்திக் கொண்டார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வினோத் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.