ஆரல்வாய்மொழி-குமாரபுரம் சாலை தடுப்புகள் அகற்றம் பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஆரல்வாய்மொழி-குமாரபுரம் சாலை தடுப்புகள் அகற்றப்பட்டது.;
நாகர்கோவில்,
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஆரல்வாய்மொழி-குமாரபுரம் சாலை தடுப்புகள் அகற்றப்பட்டது.
சாலை அடைப்பு
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டில் குமாரபுரம் பகுதி அமைந்துள்ளது. ஆனால், அந்த பகுதியில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆரல்வாய்மொழி-குமாரபுரம் இணைப்பு சாலையானது, புதிதாக போடப்பட்டுள்ள 4 வழிச்சாலையை கடந்து குமாரபுரத்திற்கு செல்கிறது. தற்போது ஊரடங்கின் காரணமாக, நான்கு வழிச்சாலையில் எவ்வித வாகனங்களும் செல்லாதவாறு அடைக் கப்பட்டது.
இந்த நிலையில் குமாரபுரம்-ஆரல்வாய்மொழி இணைப்பு சாலையை நெல்லை மாவட்ட போலீசார் திடீரென அடைத்தனர். இதனால் குமாரபுரத்தில் உள்ள மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.
மேலும், காவல்கிணறு வழியாக சென்றால், நெல்லை மாவட்ட போலீசார் அவர்களை எச்சரிக்கின்றனர். அதே சமயத்தில், குமாரபுரத்தில் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
இதனால் சாலை தடுப்பை அகற்ற குமாரபுரம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அகற்றம்
இதுதொடர்பாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அவர் சாலை தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த சாலை தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டது. அதாவது, பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்ட மண், முள்செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் இருந்தனர்.