விதிமுறைகளின்படி தொழில்கள் நடைபெறுவது குறித்து ஆலோசனை - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள விதி முறைகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் தொழில்கள் நடைபெறுவது குறித்து தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 7 நகராட்சி பகுதியில் உள்ள 8 அம்மா உணவகங்களில் ஆதரவற்றோருக்கு, ஏழை எளிய மக்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்க முதல் தவணையாக ரூ.8 லட்சத்து 58 ஆயிரம் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 17-ந்தேதி வரை இலவச உணவு வழங்க 2-வது தவணையாக ரூ.10 லட்சத்து 92 ஆயிரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.19½ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருகிற 17-ந்தேதி வரை அம்மா உணவகங்களில் 3 வேளை இலவச உணவு வழங்கப்படும்.
தமிழக மக்கள் முதல்-அமைச்சர் செய்துள்ள நிவாரண உதவியை கண்டு பெருமிதம் கொள்கின்றனர். நாடே ஸ்தம்பித்துள்ள நிலையில் முதல்- அமைச்சர் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சியினர், எல்லாம் தெரிந்தும் ரூ.5 ஆயிரம் கொடுக்கலாமே ரூ.10 ஆயிரம் கொடுக்கலாமே என கூறி வருகின்றனர். கொரோனா பிரச்சினை நேரத்தில் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி குளிர் காய நினைக்கிறார்கள். தமிழக மக்களுக்கு உண்மை நிலை தெரியும்.
பெட்ரோல், டீசலுக்கு மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுவது ஏற்புடையதல்ல. பெட்ரோல் டீசல் விலை என்பது உலக அளவில் ஏற்றம் இறக்கம் உள்ளதாகும். மத்தியிலும், மாநிலத்திலும் மக்களை நேசிக்கக்கூடிய, மக்கள் மீது பாசம் கொண்ட தலைவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த முடிவையும் முதல்-அமைச்சர் எடுக்க மாட்டார். தமிழகத்தின் உண்மை நிலைமையை வெளிப்படையாக அவர் தெரிவித்து வருகிறார். நாங்களும் அதனை மக்களுக்கு தெரிவித்து வருகிறோம். எந்த நிலைமையிலும் தமிழக மக்களுக்கு பாதிப்பு வர விடமாட்டோம்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இம்மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில், நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், கட்டுமான தொழில் ஆகியவை அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி சமூக இடைவெளியுடன் இயங்க கலெக்டர் மற்றும் தொழில் அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி அதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் 475 திருச்சபைகளில் பணியாற்றும் ஜெப ஊழியர்களுக்கு 1000 அரிசி மூடைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது கிறிஸ்தவர்கள் ஐக்கிய சபையின் மாவட்ட நிர்வாக இயக்குனர் பால்ராஜ் கிருபாகரன், மாவட்ட தலைவர் ஜேக்கப் ஜம்பு, செயலாளர் தாமஸ் விக்டர், பொருளாளர் ஜோஸ்வா கண்ணன், பிஷப்நோவா, பாஸ்டர் சந்திரசேகர், ஆசீர்வாதம் ஆகியோர் இருந்தனர்.