கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஊரடங்கை மீறி சாலையில் 2 குழந்தைகளுடன் வந்த பெண் மீட்பு

கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஊரடங்கை மீறி சாலையில் 2 குழந்தைகளுடன் நடந்து வந்த பெண்ணை மீட்டு சகோதரி வீட்டில் ஒப்படைத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

Update: 2020-05-03 23:34 GMT
நன்னிலம், 

கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஊரடங்கை மீறி சாலையில் 2 குழந்தைகளுடன் நடந்து வந்த பெண்ணை மீட்டு சகோதரி வீட்டில் ஒப்படைத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

போலீசார் கண்காணிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் யாரேனும் தேவையில்லாமல் நடமாடுகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்று பாலம் அருகில் நன்னிலம் போலீசார் சோதனை சாவடி அமைத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

2 குழந்தைகளுடன் நடந்து வந்த பெண்

அப்போது அந்த வழியாக ஒரு பெண் 2 குழந்தைகளுடன் நடந்து வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவாரூர் மருதபட்டினம் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவருடைய பெயர் இளவரசி(வயது 28) என்றும் தெரிய வந்தது.

தனது கணவர் வீரமணியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகள் விக்னேஷ், வித்யாவுடன் மயிலாடுதுறை அருகே பந்தநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதாக அவர் கூறினார்.

சகோதரி வீட்டில் ஒப்படைப்பு

அந்த பெண்ணுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு அறிவுரை கூறியதுடன் தனது சொந்த செலவில் ஒரு ஆட்டோவை அமர்த்தி அதில் அந்த பெண்ணையும், அவரின் குழந்தைகளையும் ஏற்றி கங்களாஞ்சேரி அருகே பொம்மாநத்தத்தில் உள்ள இளவரசியின் சகோதரி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கணவருடன் கோபித்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் சென்ற பெண்ணை அவரது சகோதரி வீட்டில் ஒப்படைத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் பொறுப்பான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்