குஜராத்தில் சர்வதேச நிதி சேவை மையம் - சிவசேனா, காங்கிரஸ் கண்டனம்
குஜராத்தில் சர்வதேச நிதி சேவை மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதற்கு சிவசேனா, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளன.
மும்பை,
சர்வதேச நிதி சேவை மையத்தை குஜராத் மாநிலத்தில் மத்திய அரசு அமைக்கிறது. இதற்கு மராட்டியத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து சிவசேனாவை சேர்ந்த மாநில தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய்,` ‘‘இயற்கையாகவே மும்பையில் தான் சர்வதேச நிதி சேவை மையம் அமைய வேண்டும். ஆனால் இந்த பெயர் கொடுப்பதால் மட்டும் ஒரு பகுதி நிதி தலைநகராக ஆகிவிட முடியாது. மும்பையையும், மும்பையின் நிதி ஆளுமை பற்றியும் உலகம் அறியும். மும்பையில் தான் மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, ரிசர்வ் வங்கி, செபி, வங்கிகளின் தலைமையகங்கள், நிதி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவன அலுவலகங்கள் அமைந்து உள்ளன. மும்பை தான் சர்வதேச நிதிமையம்’’ என கூறியுள்ளார்.
சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த், ‘‘குஜராத்தில் சர்வதேச நிதி சேவை மையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் எனது கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது’’ என கூறியுள்ளார்.
வர்ஷா கெய்க்வாட் கேள்வி
சர்வதேச நிதி சேவை மையம் குறித்து காங்கிரசை சேர்ந்த கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் டுவிட்டரில், மும்பையின் கனவான ஐ.எப்.எஸ்.சி. ஆத்மா சாந்தியடையட்டும். குஜராத்தின் மீது பிரதமர் மோடிக்கு உள்ள ஒருதலைபட்சமான அன்பால் மும்பை சர்வதேச நிதி மையமாகும் வாய்ப்பு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் என்பவர் ஒரு நாட்டுக்கா அல்லது ஒரு மாநிலத்துக்கா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.