மாடுகளுக்கு தீவனமாகும் வாழை இலைகள்; காய்கறி விவசாயத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

வாழை இலைகள் விற்பனையாகாததால் அவற்றை மாடுகளுக்கு தீவனமாகப்போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும், காய்கறி விவசாயத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2020-05-03 23:01 GMT
மதுரை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கத்தரி, தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, சோழவந்தான் பகுதிகளில் விளையும் காய்கறிகளை, விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். ஆனால் மக்களிடம் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். யாரும் ஓரளவுக்கு லாபம் பார்ப்பது இயற்கை தான். ஆனாலும் விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மக்களிடம் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதனால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த வேதனை அடைகிறார்கள்.

ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் என காய்கறிகளுக்கு கடுமையான கிராக்கி இருக்கும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருமணம் உள்ளிட்ட விஷேசங்கள், திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவையும் மூடப்பட்டன.

இதனால் காய்கறிகளுக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது. இதுகுறித்து பன்னியான் பகுதியை சேர்ந்த சிங் என்ற விவசாயி கூறியதாவது:-

எங்கள் பகுதியில் காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கிறோம். ஆனால் இந்த வருடம் எங்களுக்கு போதாத காலமாக அமைந்துள்ளது. ஒருபுறம் காய்கறிகளுக்கு போதுமான விலை கிடையாது. மற்றொருபுறம் இயற்கையும் கடுமையான சோதனையை தருகிறது. விவசாயத்துக்கு தண்ணீர் கிடையாது. எங்கள் தோட்டத்தில் வெங்காயம், கத்தரி பயிரிட்டோம். ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் அவை கருகிவிட்டன. எங்கள் பகுதியில் கத்தரி, வெண்டை, தக்காளி போன்றவற்றை பயிரிட்டவர்களுக்கும் இதே கதி தான்.

அரசாங்கத்தின் அறிவுரையின்பேரில் தோட்டப்பயிர்களுக்கு இன்சூரன்சு செய்தோம். ஆனால் இதுவரை எங்களுக்கான நிவாரண தொகை வந்து சேரவில்லை. எனது உறவினர் சில ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டு இருந்தார். அவரது தோட்டத்தில் விளையும் வாழை இலையை வாங்குவதற்கு ஆள் இல்லை.

பால் பண்ணை நடத்துபவர்கள், மாடு வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளுக்கு தீவனமாக வாழை இலையை அறுத்துக்கொண்டு செல்கிறார்கள். இதே போன்றுதான் மற்ற வாழை விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இதுதான் விவசாயத்தை பலர் கைவிடுவதற்கு காரணம். எனவே விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்