கோவை மாவட்டத்தில் சிறுவன் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 146 ஆக உயர்வு

கோவை மாவட்டத்தில் சிறுவன் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது.

Update: 2020-05-03 22:47 GMT
கோவை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 142 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 135 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியை அடுத்த வேலாண்டிப்பாளையத்தை சேர்ந்த சிலர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரம் சென்று கோவை வந்தனர். இதற்கிடையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 62 வயது முதியவர், 43 வயது பெண் மற்றும் 10 வயது சிறுவன் உள்பட 4 பேர் மீண்டும் காரில் கேரளா செல்ல முயன்றனர். அவர்கள் தமிழக-கேரள எல்லைப்பகுதியான வாளையாறு சோதனை சாவடிக்கு சென்ற போது 4 பேரையும் கொரோனா பரிசோதனை செய்து வந்தால்தான் அனுமதிப்போம் என்று கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 4 பேருக்கு கொரோனா

இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தாங்களாகவே பரிசோதனை செய்து கொண்டனர். அதில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் தற்போது கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

இதற்கிடையில் கோவை வெங்கிட்டாபுரத்தில் 31 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து தாய் மற்றும் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அந்த பெண் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

146 ஆக உயர்வு

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 142 பேர் சிகிச்சை பெற்ற னர். நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று உறுதியாகி 11 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கோவையில் புதியதாக தொற்று கண்டறியப்பட்ட 4 பேர் வசித்த பகுதிகளில் உள்ள 200 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்