வாகனங்களில் வீதி, வீதியாக விற்பனை: கோவை காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் குறைந்தது

வாகனங்களில் வீதி, வீதியாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதால் கோவையில் உள்ள காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் குறைந்தது.

Update: 2020-05-03 22:32 GMT
கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களும், சாய்பாபா காலனியில் ராமலிங்க செட்டியார் பள்ளி மைதானமும் காய்கறி சந்தைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச்செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

4 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மறுநாள் தளர்வு செய்யப்பட்டபோது காய்கறி சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

கூட்டம் குறைந்தது

இந்த நிலையில் கோவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து பகுதிகளிலும் காய்கறி கடைகள் திறந்து இருந்தன. சந்தை தவிர ரோட்டோரங்களிலும் ஏராளமானவர்கள் காய்கறி விற்றனர். மேலும் வாகனங்களிலும் வீதி, வீதியாக சென்று ஏராளமானவர்கள் காய்கறிகளை விற்று வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று அனைத்து சந்தைகளிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதுகுறித்து உக்கடம் காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறும்போது, காய்கறி சந்தைகளில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

ஆனால் காய்கறி விலையும் குறைந்துள்ளது. வீதிகளில் விற்பனை செய்வதை விட சந்தைகளில் காய்கறிகள் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சந்தைகளில் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏராளமானவர்கள் காய்கறி விற்பனைக்கு மாறி வீதி,வீதியாக விற்று வருவதால் சந்தைகளில் கூட்டம் குறைய இதுவும் ஒரு காரணம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்