கொரோனா தடுப்பு நடவடிக்கை: புதிதாக தேர்வாகி பணிக்கு வந்த போலீசாருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

புதிதாக தேர்வாகி பணிக்கு வந்த போலீசாருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனையும் நடத்தப்பட்டது.

Update: 2020-05-03 22:30 GMT
திருச்சி, 

புதிதாக தேர்வாகி பணிக்கு வந்த போலீசாருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனையும் நடத்தப்பட்டது.

போலீஸ் வேலைக்கு தேர்வு

காவல்துறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 500 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் பயிற்சி தொடங்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயிற்சி தொடங்கப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் புதிதாக தேர்வான போலீசாரை கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்களை நேற்று பணியில் சேரும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது.

15 நாட்கள் பயிற்சி

திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் 521 ஆண்கள், 103 பெண்கள் பணியில் சேர உள்ளனர். முதல்கட்டமாக இவர்களுக்கு 15 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த 15 நாட்கள் பயிற்சி பெண்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலும், ஆண்களுக்கு திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் அணி மைதானத்திலும், நவல்பட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியிலும் அளிக்கப்படுகிறது.

கிருமிநாசினி தெளிப்பு

இதையொட்டி போலீஸ் வேலைக்கு தேர்வான ஆண்கள் திருச்சியில் சிறப்பு காவல்படை முதல் அணி மைதானத்துக்கு நேற்று அதிகாலை முதலே பெட்டி படுக்கையுடன் வர தொடங்கினர். அவர்கள், நுழைவு வாயிலில் கிருமிநாசினி திரவம் மூலம் கைகளை சுத்தப்படுத்தி, அவர்களுடைய உடைமைகள் மீது கிருமிநாசினி தெளித்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மைதானத்தில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அவர்களில் யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், ஒவ்வொருவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. முதல் நாளான நேற்று 521 பேரில் 260 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதால் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்துக்கு முதல் நாளான நேற்று குறைந்த அளவே பெண்கள் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்