மாரண்டஅள்ளி அருகே கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று அறிகுறி?
மாரண்டஅள்ளி அருகே கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிகிறது.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெரியானூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஈரோட்டில் தறி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதமே ஊருக்கு வந்துவிட்டார். இவரது மனைவி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பொது பரிசோதனை செய்துள்ளார்.அவரது ரத்த மாதிரியை தர்மபுரிக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர்.
அதில், முதல் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து அந்த கிராமம் முழுவதும் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 150 வீடுகள் உள்ள இந்த கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் தற்பொழுது கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி கூறும்போது, பெரியானூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு நடந்த முதல்கட்ட பரிசோதனையில் கொரானா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது இரண்டாம் கட்டமாக அந்த கர்ப்பிணி மற்றும் அவரது உறவினர்கள் 9 பேருக்கு மாதிரிகள் எடுத்து தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகே மற்ற தகவல்களை வெளியிட முடியும், என்று கூறினார்.