ராமேசுவரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில பக்தர்கள் விரைவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் - கலெக்டர் தகவல்
அரசின் உத்தரவுக்கு பின்பு ராமேசுவரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
ராமேசுவரம்,
கொரோனா பரவல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, ராமேசுவரத்திற்கு நேற்று கலெக்டர் வீரராகவராவ் வந்தார். அவர் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் 1 மாதத்திற்கும் மேலாக ஊருக்கு செல்ல முடியாமல் இருக்கும் வடமாநில பக்தர்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து பலத்த சூறாவளி காற்றால் சேதமான படகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் அப்துல்ஜபார், நகராட்சி ஆணையாளர் ராமர், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமேசுவரம் கோவிலுக்கு வந்து, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உள்ள வடமாநில பக்தர்கள் 185 பேர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அரசின் உத்தரவுக்கு பின்பு ராமேசுவரத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அரசின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்படுவார்கள். பலத்த சூறாவளி காற்றால் சேதமான படகுகளின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு மூலம் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.