மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு அமல் - கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வை அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,
கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய அளவில் கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு தற்போது 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஆனால் பசுமை, ஆரஞ்சு மண்டலத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஊரடங்கு தளர்வு தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை 4-ந் தேதி(நாளை) முதல் அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு:-
“கர்நாடகத்தில் விமானம், ரெயில் போக்குவரத்துக்கான தடை நாளை(திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி நீட்டிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. மெட்ரோ ரெயில் இயங்காது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தலாம்.
கல்வி நிலையங்கள்
அவசர தேவைகளுக்கு போக தங்கும் விடுதிகள் செயல்படாது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள், மாநாட்டு அரங்குகள் ஆகியவற்றுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை விடுதிகள், கல்வி நிலையங்கள், கலாசார, மத விழாக்கள் மற்றும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் நிகழ்ச்சிக்கு தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
பொதுமக்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இந்த இடைபட்ட நேரத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளூர் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் தீராத நோய் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
சமூக விலகல்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ மையங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது. அதே நேரத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பசுமை மண்டலத்தில் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் சமூக விலகல் விதிமுறையுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நுழைவு வாயில், வெளியே வருதல் பகுதியை உருவாக்க வேண்டும்.
அந்த பகுதிகளில் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்களை அனுமதிக்க வேண்டும். அந்த பகுதிகளில் இருந்து வெளியே செல்பவர்களையும், வெளியில் இருந்து உள்ளே வருபவர்களையும் சோதனை செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் நடைபெறும் மரணங்களை பதிவு செய்ய வேண்டும்.
சலூன்கள்
சிவப்பு மண்டலத்தில் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோக்களுக்கு அனுமதி கிடையாது. மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே வாடகை கார்கள், பஸ்களை இயக்க அனுமதி இல்லை. அழகு நிலையங்கள், சலூன்களுக்கு அனுமதி கிடையாது. சிவப்பு மண்டலத்தில், அனுமதிக்கப்பட்ட பணிகளுக்காக செல்பவர்களையும், அது தொடர்பான வாகனங்கள் இயங்கவும் தடை இல்லை.
அந்த பகுதியில் கார்களில் டிரைவர் உள்பட 3 பேர் செல்லலாம். இரண்டு சக்கர வாகனத்தில் பின்புறத்தில் அமர்ந்து பயணிக்க அனுமதி இல்லை. அந்த பகுதியில் அனைத்துவிதமான தொழில் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகிறது. நகரங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கட்டுமான திட்ட பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் அங்கேயே இருக்க வேண்டும்.
கடைகளை திறக்கலாம்
அதே நேரத்தில் கிராமப்புறங்களில் அனைத்து விதமான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து வணிக வளாகங்கள், சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடை இல்லை. தனித்து இயங்கும் கடைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளை திறக்கலாம். கிராமப்புறங்களில் வணிக வளாகங்களை தவிர அனைத்து விதமான கடைகளையும் திறக்கலாம்.
அத்தியாவசிய பொருட்கள் வர்த்தகத்திற்கு மட்டும் ஆன்லைன் மூலம் வணிகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். மத்திய அரசு, மாநில அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் 100 சதவீதம் பணிக்கு ஆஜராக வேண்டும்.
பஸ்கள் இயங்கலாம்
ஆரஞ்சு மண்டலத்தில் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயங்க அனுமதி இல்லை. வாடகை கார்கள் அனுமதிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்பவர்கள், மாவட்டத்திற்கு இடையே கார்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கார்களில் ஒரு டிரைவர் உள்பட 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
பசுமை மண்டலத்தில் பஸ்கள் 50 சதவீத இருக்கையுடன் இயங்கலாம். பஸ் பணிமனைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். சிவப்பு, ஆரஞ்சு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து சேவைகளும் இந்த மண்டலத்தில் அனுமதிக்கப்படும். மேலும் மத்திய அரசு வழிகாட்டுதலில் கூறியுள்ள அனைத்து சேவைகளும் அனுமதிக்கப்படும். மாவட்டங்கள் இந்த உத்தரவை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்.
முக கவசம் கட்டாயம்
பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக விலகலை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் அலுவலகத்தில் தூய்மையை பராமரிக்க வேண்டும்.”
இவ்வாறு தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.