ஊரடங்கை தளர்த்துவது குறித்து, காணொலி காட்சி மூலம் கலெக்டர்களுக்கு எடியூரப்பா அறிவுரை

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்த படி காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர் களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை தளர்த்துவது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

Update: 2020-05-03 00:12 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 3-வது முறையாக வருகிற 17-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. அதே நேரத்தில் பசுமை, ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விஜயாப்புரா, பெலகாவி, பாகல்கோட்டை, மைசூரு, தட்சிண கன்னடா, பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், கலபுரகி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து கலெக்டர்களுக்கு முதல்- மந்திரி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உணவு தானியங்கள்

மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஊரடங்கை தளர்த்தும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மத்திய அரசு அனுமதித்துள்ள நடவடிக்கைகளை மட்டும் தொடங்கும்படி கூறியிருக்கிறேன். சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

மாநிலத்தில் உள்ள பிற மாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் ஒரு வழி கட்டணத்தை செலுத்தி பயணிக்க வசதிகளை ஏற்படுத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

பாஸ் வழங்கப்படும்

வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். மாவட்டங்களுக்கு இடையே ஒரு நாளைக்கு ஒரு முறை சென்று வர பாஸ் வழங்கப்படும். நெசவாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க தனியாக ஒரு கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்